கொரோனா பரவலின் இரண்டாவது அலையை தடுக்க, விரைவான நடவடிக்கைகள் எடுக்கக்கோரி மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக கர்நாடாக, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 96 சதவிகிதமாக இருப்பதாக கூறினார்.
கொரோனாவுக்கு உயிரிழப்போரின் விகிதமும் உலக நாடுகளை விட, இந்தியாவில் குறைவான விகிதத்திலேயே இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில் கொரோனா மீண்டும் மீண்டும் பல அலைகளாக தாக்கி வருவதாகவும், நமது நாட்டில் சில மாநிலங்களில் திடீரென கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்திருப்பதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் 70 மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக 150 சதவிகிதத்துக்கும் அதிகமாக, கொரோனா தாக்கம் அதிகரித்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். எனவே இரண்டாவது அலையை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.







