காஸாவின் மற்றொரு மிகப்பெரிய மருத்துவமனையான அல்-குவாத் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 15வது நாளாக இன்றும் வன்முறை நீடித்து வருகிறது.
பெரும்பாலான மருத்துவமனைகள் செயல்படாமல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகள் குண்டுவெடிப்புகளால் சேதமடைந்துள்ளன, செவ்வாயன்று காசா நகரில் உள்ள அல்-அஹ்லி அரபு -மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து காஸா மீது தரைவழித் தாக்குதலை மேற்கொள்ளவும் இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது. ஏற்கெனவே காஸாவின் அல்-அஹ்லி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். தற்போது மற்றொரு மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
வடக்கு காஸாவில் உள்ள அல்-குவாத் மருத்துவமனையில் இருந்து பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேறுமாறு பாலஸ்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டி (ஆர்சிஎஸ்) அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த மருத்துவமனையில் சுமார் 400 நோயாளிகள் மற்றும் 12,000 பொதுமக்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த போரில் இதுவரை இரு தரப்பிலும் 5,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 12,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.







