இன்னும் சில தினங்களில் பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடு சென்றுள்ள ராகுல் காந்தி இந்தியா திரும்பியதும் பி.கே. இணைவு உறுதியாகும். ராகுல் காந்திக்காகத் தான் காங்கிரஸ் கட்சியில் பி.கே. இணைவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பி.கே. காங்கிரஸில் இணைந்தால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி சாத்தியமா?
காங்., வெற்றியும் கட்டமைப்பு பலமும்:
ஒரு கட்சியின் வெற்றிக்கு கட்டமைப்பு மற்றும் தேர்தலுக்கான முன் தயாரிப்பு வேலைகள் முக்கியம். காங்கிரஸ் கட்சியிடம் இந்த இரண்டும் தற்போதைய சூழலில் இல்லை என்பதை தேர்தல் தோல்விகள் உறுதி செய்கின்றன. கட்டமைப்பு ரீதியாக காங்கிரஸ் பல மாநிலங்களில் பலவீனமாக இருப்பதாலேயே தோல்வியை தழுவியது. பஞ்சாப், உத்தரப்பிரதேச தேர்தல் இதற்கு சாட்சி. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி மீதான அதிருப்தி இல்லை. அதாவது, வேளாண் சட்டங்கள் மூலமாக பாஜக மீது பஞ்சாப் விவசாயிகள் மிகக்கடுமையான அதிருப்தியில் இருந்தார்கள். இந்த அதிருப்தியை பயன்படுத்திக் கொண்டு கூட காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு காரணம், காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு சிதைந்து போனதே. பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் – சித்து கோஷ்டிகள் இடையே தேர்தலுக்கு முன்பு நடந்த போரை இந்தியாவே பார்த்துக்கொண்டு தான் இருந்தது. அந்த கோஷ்டி பூசலை சரிகட்டி, கட்சியை பலப்படுத்தி, தேர்தல் வெற்றியை உறுதி செய்ய காங்கிரஸ் தலைமை தெளிவான முடிவை எடுக்கமுடியவில்லை.
உத்தரப்பிரதேசத்திலும் இதே நிலை தான். உத்தரப்பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என்று தேடிப்பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட வட இந்திய மாநில மக்கள் டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு நடந்தே சென்றார்கள். ராகுல் காந்தி அவர்களை சந்தித்து உரையாடினார். உத்தரப்பிரதேசத்திற்கு நடந்து சென்ற தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றுவிட்டது. லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு உத்தரப்பிரதேசத்திற்குள் நுழைய முயன்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியை விட காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு அரசியல் செய்தது. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் வலுவான ஒரு தலைவரைக் காட்டக் கூட காங்கிரஸ் கட்சியால் முடியவில்லை. கட்டமைப்பு பலம் இல்லாததால், உத்தரப்பிரதேச தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியையே தழுவியது.
ஆக மொத்தத்தில், ஒரு கட்சியின் வெற்றிக்கு கட்டமைப்பு மிக முக்கியமானது. இந்த கட்டமைப்பை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டதால், உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், திரிபுரா என அடுத்தடுத்த தோல்விகளை தழுவியுள்ளது.

இதே போலத்தான், தேர்தலுக்கான முன் தயாரிப்பும் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்திற்கு சென்று பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, நலவாழ்வு திட்டங்களை அறிவித்தார். தேர்தல் தோல்வியைப் பற்றியும் காங்கிரஸ் கவலைப்படவில்லை. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முன் தயாரிப்பையும் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. இதுபோல், ஒரு தேர்தல் முடிந்தால் சில காலம் ஓய்வு எடுத்துவிட்டு, கடைசி நேரத்தில் மக்களை சந்திப்பதை காங்கிரஸ் கட்சி வழக்கமாக கொண்டுள்ளது. தேர்தல் முன் தயாரிப்பு வேலைகளை காங்கிரஸ் கட்சி முடுக்கி விடாததால் அந்த கட்சி மக்கள் மன்றத்தில், தேர்தல் வெற்றியைப் பெற தவறுகிறது. வெற்றிவாய்ப்பு உள்ள இடங்களில் கூட காங்கிரஸ் கட்சி தனது வெற்றியை இழக்கிறது. இருக்கமான ஒற்றைத் தலைமையின் கீழ் பாஜக இருக்கும் போது அதற்கு மாறான கட்டமைப்பு பலம் இல்லாத கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இந்த நிலை இருக்கும் போது காங்கிரஸ் கட்சியால் எப்படி வெற்றி பெற முடியும்?
இரு பிளவாக இருக்கும் காங்கிரஸ்:
பாஜகவை எதிர்கொள்வதில் காங்கிரஸ் கட்சி இரண்டு பிளவாக உள்ளது. 1) ஜி. 23 தலைவர்கள் 2) மற்றவர்கள். மற்றவர்களில் சோனியா குடும்பமும் உள்ளடக்கம். பாஜகவும் சோனியா குடும்பத்தைத் தான் முதன்மை எதிரியாக பார்க்கிறது. ஜி.23 தலைவர்களை தனக்கான நட்பு சக்தியாகவே பாஜக பார்க்கிறது. தனது முதன்மை எதிரியாக உள்ள பாஜகவை தோற்கடிப்பதில் காங்கிரஸ் கட்சி தன்னுடைய பலத்தைப் பற்றிய பருன்மையான அல்லது திட்டவட்டமாக இல்லாமல் உள்ளது. அப்படி இல்லாததே பாஜக மீது அதிருப்தியில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் சிக்கலில் சிக்கி இருக்கிறது.
பலவீனத்தை மறந்து மிகைப்படுத்தி பார்க்கும் காங்கிரஸ்:
இந்த இடத்தில், காங்கிரஸ் கட்சி தனது பலத்தை மிகைப்படுத்தி பார்க்கிறது. கூட்டணி அமைப்பதில் ஒரு புறம் சிக்கலை சந்தித்துக்கொண்டே மற்றொரு புறம் தான் ஆளும் மாநிலங்கள் மற்றும் எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களில் கூடுதல் வெற்றியை உறுதி செய்வதில் காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை. அதாவது, குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கவனம் செலுத்தினால் கூட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களை ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியால் எளிதில் பெற முடியும். ஆனால், அந்த கவனத்தைக் கூட காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக வியூகம் மூலமாக செயல்படுத்த தவறுகிறது.
தனிநபர் செல்வாக்கில் சிக்கிய காங்கிரஸ்:
காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் தங்களின் கட்சியின் வெற்றியை விட தங்களின் வெற்றி பலத்தை மட்டுமே முதன்மையாக பார்க்கிறார்கள். இதுவே காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்துகிறது. பாஜக தங்களின் கருத்தியலில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட அல்லது பாஜக கருத்தியலுக்காக தீவிரமாக பணியாற்றுபவர்களை முதன்மைப்படுத்துகிறது. அவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதி கொடுக்கிறது. அதாவது, பாஜகவில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் கருத்தியல் பலம் பொருந்தி இருக்க வேண்டும் அவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் என்ற எண்ணம் அக்கட்சியிடம் உள்ளது. பாஜக கருத்தியல் பலம் கொண்ட அமைப்பாக தன்னைக் காட்டிக்கொள்கிறது. காங்கிரஸ் கட்சியில் தனிமனித சுபாவங்கள் தனிநபர் செல்வாக்கை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கிறது.
கடந்த காலங்களோடு ஒப்பிடும் போது உத்தரப்பிரதேசத்தில் பாஜக 50 தொகுதிகளை இழந்துள்ளது. உத்தரகாண்டிலும் பாஜகவின் வாக்கு விழுக்காடு குறைந்துள்ளது. அப்படி இருந்தும் கூட குஜராத், இமாச்சலப்பிரதேசத்தில் அதே நிலை தொடரக்கூடாது என்பதற்காக நலவாழ்வு திட்டங்களை அறிவிக்கிறது.
குஜராத் மாநிலத்தில் பாஜக மிகவும் பலம் பொறுந்தி இருக்கிறது. மிக நீண்ட ஆண்டுகள் குஜராத்தை ஆட்சி செய்துள்ளது. இருந்தும் கூட நலவாழ்வு திட்டங்களை நம்பித்தான் தேர்தலை சந்திக்கும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இந்த பலவீனத்தை காங்கிரஸ் கட்சி புரிந்துகொள்ளவில்லை. இந்த பலவீனத்தால் தான் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் பலம் பொருந்திய அமைப்பு இல்லாமல் ஒரு வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்ப தான் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் உள்ளே வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியின் வெற்றியை இதன் பின்னணியில் தான் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசியல் சூழலை புரிந்து கொள்ள முடியாத நிலைதான் தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளது.
கைகொடுக்குமா 600 பக்க அறிக்கை?:
காங்கிரஸ் வெற்றிக்கு 600 பக்க அறிக்கையை பி.கே. சமர்ப்பித்துள்ளார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிக்கு வியூகம் அமைத்து வெற்றிகரமாக பாஜகவை அறியணை ஏற்றியவர். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்குள் நுழைகிறார். பி.கே. சமர்ப்பித்துள்ள 600 பக்க அறிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி எப்படி சீரமைக்கப்படப்போகிறது?
பாஜக ஆட்சியின் மீதான அதிருப்தியை பாஜகவே உணர்கிறது என்பதை புரிந்து கொள்வதிலும் அந்த அதிருப்தியை பயன்படுத்தும் விதமாக மக்கள் பிரச்னைகளை போராட்டமாக்குவதிலும் தான் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு சாத்தியம். இதை எப்படி காங்கிரஸ் கையாளப்போகிறது? பார்க்கலாம். என்ன நடக்கிறது என்று…







