இந்தியாவில் அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாகவும், தேவையை பூர்த்தி செய்ய தினசரி நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது 72.50 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. அதேவேளையில், 22.01 மில்லியன் டன் நிலக்கரி பல்வேறு அனல் மின் நிலையங்களில் இருப்பு உள்ளது. தற்போது உள்ள கையிருப்பு அடுத்த ஒரு மாதத்திற்கு போதுமானதாக இருக்கும். நிலக்கரி உற்பத்தி என்பது தினசரி அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், அவை மீண்டும் சேகரித்து வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2021-2022ம் ஆண்டில் நிலக்கரி உற்பத்தி என்பது 777.23 மில்லியன் ஆக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 8.55% அதிகமாகும். அதேசமயம், கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி 4.43% உயர்ந்துள்ளது.
அந்த வகையில் 2021-2022 நிதியாண்டில் கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி 622.64 மில்லியன் டன் என்ற அளவில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. சிங்கரேனி கோல் நிறுவனத்தின் உற்பத்தி என்பது 2021-2022 நிதியாண்டில் 28.55% உயர்ந்துள்ளதோடு சுரங்க உற்பத்தி அளவும் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2021-2022ம் நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிலக்கரி அளவு என்பது 818.04 மில்லியன் டன் ஆகும். இது முந்தைய நிதி ஆண்டோடு ஒப்பிடுகையில், 690.71 மில்லியன் டன் என்ற அளவை காட்டிலும் (18.43%) அதிகம் ஆகும். 2021-2022 நிதியாண்டு காலகட்டத்தில் கோல் இந்தியா நிறுவனம் தரப்பில் 661.85 மில்லியன் டன் நிலக்கரி பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அளவு 2020-2021 நிதியாண்டில் பதிவான 573.80 மில்லியன் டன்னை விட அதிகம் ஆகும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








