பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு – காவல்துறை விளக்கம்!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு நேற்று பிற்பகல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல்…

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு நேற்று பிற்பகல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றவரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தீர்மானத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால்,  ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசியதாக கருக்கா வினோத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.  பின்னர் கருக்கா வினோத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்,  அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.  இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை நேற்று காவல்துறை வெளியிட்டது.

இந்நிலையில், சென்னை வேப்பேரியில் இன்று டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டன.

அந்த சிசிடிவி காட்சியில்,  ஆளுநர் மாளிகைக்கு கருக்கா வினோத் தனியாக நடந்து வருவதும்,  ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டை கீழே வைப்பதும்,  காவலர்கள் கருக்கா வினோத்தை மடக்கி பிடிப்பதும் பதிவாகியிருந்தது.

பின்னர் சம்பவம் குறித்து விளக்கமளித்த டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர்,  கருக்கா வினோத் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை ஆடையில் மறைத்து வைத்து எடுத்து வந்ததாகக் கூறினர்.

4 பெட்ரோல் குண்டுகளை கருக்கா வினோத் எடுத்து வந்ததாகவும், அதில் 2 குண்டுகள் வெடித்ததாகவும் குறிப்பிட்டனர்.  குற்றவாளி உடனடியாக கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்த அவர்கள்,  ஆளுநர் நேரம் ஒதுக்கினால் வீடியோ ஆதாரங்களை வழங்கத் தயார் என்றும்,  ஆளுநர் மாளிகை பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : ஆளுநரை மாற்ற வேண்டாம்…! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு 

மேலும், மயிலாடுதுறையில் ஆளுநரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், மயிலாடுதுறை சம்பவத்தில் FIR பதிவு செய்யப்படவில்லை என்பதில் உண்மையில்லை என்றும்,  ஆளுநர் கலந்து கொண்ட எந்தவொரு நிகழ்ச்சியிலும் பாதுகாப்பு குறைபாடு இல்லை என்றும் விளக்கமளித்தனர்.

கருக்கா வினோத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும்,  இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124ல் சேர்ப்பது குறித்து விசாரணைக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான வீடியோவைக் காண : 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.