சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள இருக்கைகளுக்கு, தோனி பெயிண்ட் அடித்த காட்சிகளை, சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 31ம் தேதி தொடங்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் மோதுகின்றன. இந்த முறையும் சென்னை அணியின் கேப்டனாக தோனி தொடர்கிறார். இதற்காக கடந்த வாரத்தில் சென்னை வந்த தோனி, தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சென்னை அணி வீரர்களுகும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளது. இதனால் இரு அணி வீரர்களும் தீவிர பயிச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், சென்னை ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிஎஸ்கே அணியின் நிர்வாகம் சென்னை அணி வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவை அவ்வபோது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. முக்கியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியின் வீடியோவை தவறாமல் சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட, அதனை சென்னை ரசிகர்கள் தவறாமல் பார்த்து கொண்டாடி மகிழ்கின்றனர்.
அந்தவகையில், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் அமரும் இருக்கைகளுக்கு டோனி பெயிண்ட் அடிக்கும் வீடியோவை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு பிராவோவுக்கு டோனி விசில் அடிக்க கற்றுக் கொடுத்த வீடியோ வைரலாகியது.
ஐபிஎல் கோப்பையை 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் 4 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 2 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வென்றுள்ளன. இந்த முறை நடைபெற உள்ள போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








