கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சில சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக முன்வந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அந்த தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள இடைதேர்தல் செலவை வேட்பாளர்கள் ஏற்கும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும் படி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் தாக்கல் செய்த பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்திருந்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தற்போது ஏற்பட்டுள்ள இடைத்தேர்தல் மரணம் அல்லது தகுதி நீக்கம் ஆகியவற்றால் ஏற்படவில்லை. மாறாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களே தாமாக முன்வந்து ராஜினாமா செய்ததால் ஏற்பட்டுள்ளதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இடைத் தேர்தலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களே காரணமாக மாறி உள்ளனர். நிலுவையில் உள்ள தகுதி நீக்க நடவடிக்கை விவரங்களை ஆராயாமல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதை தடுக்க உரிய விதிகளை வகுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளார்.
அதுவரை மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று நாளை உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளனர்.




