அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20ம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை 21ம் தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேறு யாரும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாததால் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வாய்யுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். விடுமுறை தினமான நாளை அவசர வழக்காக விசாரிப்பதற்கு பொறுப்பு நீதிபதி ராஜா அனுமதி அளித்துள்ளார். இந்த மனுவை நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்க உள்ளார்.