ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் திருச்சியில் மாநில தழுவிய மாநாடு நடத்தப்படும் எனவும் அதை தொடர்ந்து மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம் எனவும் ஓ பி எஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடக்க உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரன், ஜே சி டி பிரபாகரன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்ததாவது..
அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் மிக மிக சிறுபிள்ளை தனமாக நடந்து வருகிறது. ஒரு தேர்தல் என்றால் சரியான கால அவகாசம் , வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவை பின்பற்றப்பட்டு நடைபெற வேண்டும். அதிமுக மாபெரும் மக்கள் இயக்கம், மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருக்கும் இயக்கம். இதன் தேர்தல் சட்ட விதிப்படி தான் நடக்க வேண்டும்.
தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திடீர் தேர்தல் அறிவிப்பது மாபெரும் இயக்கத்தை கொச்சைபடுத்தும் செயல். சட்டரீதியாக இதை சந்திக்க தயாராக உள்ளோம். இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை எங்களிடம் உள்ளது. அதற்கு தான் தொடக்கத்தில் இருந்து அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று சொன்னோம்.
ஈரோடு தேர்தல் கற்றுக் கொடுத்த பாடத்தை கூட அவர்கள் கற்றுக் கொள்ளவில்லை. எம் ஜி ஆர் சொன்னது போல் திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம். புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி வழியில் கட்சியை நடத்த முயற்சி செய்வோம். இனி இவர்கள் திருந்தி திரும்பி வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. புரட்சி தலைவர், புரட்சி தலைவி பெயரை பயன்படுத்த அனுமதித்தோம், கட்சி சின்னத்தை தந்தோம், எங்களது வேட்பாளரை வாபஸ் செய்ய வைத்தோம். இவை எதற்குமே பலன் இல்லை.
பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்து..?. இந்த வழக்கில் நிச்சயம் மேல்முறையீடு செய்ய உள்ளோம். இந்த இயக்கத்தை மீட்க முழு முயற்சியோடு பாடுபடுவோம். கட்சி குறித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.
இதனையும் படியுங்கள்: வேட்புமனுவை தாக்கல் செய்த இபிஎஸ் : போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு
சசிகலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். டி டி வி தினகரன் தனி கட்சி வைத்துள்ளார். சி பி ஐ , சி பி ஐ எம் போல சேர்ந்து செயல்படலாம் என்றார். எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயார் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இது இரண்டு தரப்பினரும் எடுக்க வேண்டிய முடிவு “ என பண்ருட்டி ராமச் சந்திரன் தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது..
பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கழக அமைப்புரீதியான தேர்தல் நடைபெறுவது தான் சட்ட விதி. முதலில் அடிப்படை உறுப்பினர்களால் உச்ச பட்சம் பொறுப்பாளராக தேர்வு செய்ய வேண்டும். உறுப்பினர் படிவம் கொடுக்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். எதுவுமே முறைப்படி நடைபெறவில்லை.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தேர்தலை இணைந்து நடத்தி இருக்க வேண்டும். இந்த அளவுக்கு அராஜகமான பொதுக்குழு இது வரை நடைபெற்றது இல்லை.
கழக தொண்டர்கள் இவர்கள் மீது நம்பிக்கை வைத்து இருந்தால் ஈரோடு தேர்தலில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்கள். புரட்சி தலைவர் உருவாக்கிய சட்ட விதியை, புரட்சி தலைவி கடைபிடித்தார்கள். அவற்றை இவர்கள் தூக்கி போட்டு விட்டார்கள். தனக்கு தானே பட்டம் சூட்டிக் கொண்டது போல உள்ளது.
இந்த இயக்கத்தை மீட்டெடுப்பதற்காக மக்களிடம் சுற்றுப் பயணம் மேற்கொள்வோம். அது தான் எங்கள் இலக்கு. தமிழகத்தில் இவரை விட சர்வாதிகாரி அரசியல்வாதியாக இதுவரை இருந்ததில்லை. தொண்டர்கள் கலங்க வேண்டாம், அச்சப்பட வேண்டாம். அண்ணா, புரட்சி தலைவர் சகோதர பாசத்துடன் இந்த கட்சியை வளர்த்தார்கள், தாயன்புடன் புரட்சி தலைவி வளர்த்தார்.
கொடநாடு கொலை வழக்கில் இன்னும் பல பூதாகரங்கள் வெடிக்கும் , இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக மக்கள் மன நிலையாக உள்ளது. கட்சி இந்த நிலைமைக்கு வந்ததுக்கு நாங்கள் காரணம் இல்லை. புரட்சி தலைவர், புரட்சி தலைவி ஆகியோரை நம்பி வந்த தொண்டர்கள் , மக்கள் அவர்களுக்கு தான் கட்சி. மாபெரும் இயக்கத்தை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து உள்ளனர் அதற்கு யார் காரணம் என்று உங்களுக்கு தெரியும்
ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் மாநில தழுவிய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
திருச்சியில் அண்ணா நடத்திய மாநாடு போல் நாங்களும் மாநாடு நடத்த உள்ளோம். அதனைத் தொடர்ந்து மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம் “ என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.







