பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு!

பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் எஸ்.அன்வர்தீன்(66) என்பவர் நெஞ்சுவலி காரணமாக சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.

பழனி தண்டாயுதபாணி கோயில் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை முறைகேடாகத் தனிநபர் பெயரில் 2 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு செய்த வழக்கைச் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகியோர் தரப்பில் ஜாமீன் கோரி திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ், மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனிடையே, இந்த நில மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயபிரகாஷ், நேற்று இரவு திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார். அவரிடம் சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தீவிர விசாரணை நடத்தினார். இந்த நிலையில் பழனி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் எஸ்.அன்வர்தீன்(66) என்பவர் நெஞ்சுவலி காரணமாக அதிகாலை 12.30 மணி அளவில் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் நேற்றிரவு நெஞ்சுவலி காரணமாக சிறையில் உயிரிழந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து வழக்கறிஞர் அன்வர்தீன் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.