மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ”காவிரி படுகை என்பது ஒரு பற்றாக்குறை படுகையாக இருப்பதால் சிறிய அளவிலான நீர் திட்டங்களுக்கு கூட அனுமதியை முன்பு காவிரி நதிநீர் தீர்ப்பாயம் வழங்கவில்லை , குறிப்பாக கர்நாடக அரசு சில சிறிய நீர் பாசன திட்டங்களுக்கு அனுமதி கோரியபோது அது முற்றிலும் நிராகரிக்கப்பட்டது.
அதேவேளையில் காவிரி படுகையில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதன் காரணமாக புதிய திட்டங்களை செயல்படுத்த மதிப்பிடுவது என்பது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறிய செயலாகும். ஏனெனில் கீழ் பாசன மாநிலங்களுக்கு நீர் விநியோகம் பாதிக்கும் வகையில் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதனை மேல் பாசன மாநிலங்கள் செயல்படுத்தக்கூடாது என்று தெளிவாக உச்ச நீதிமன்றம் வழிகாட்டி உள்ளது
அதுபோல, காவிரி நீர் விவகாரத்தில் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மட்டுமே காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது மாறாக காவிரி படுகையில் புதிய திட்டங்களை ஆய்வு செய்ய அதிகாரம் அளிக்கும் வழிகாட்டுதல்கள் வழங்குவது உச்ச நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை பயனற்ற தாக்கி விடும். எனவே காவிரியில் புதிய நீர் திட்டங்களை ஆய்வு செய்வது அனுமதி வழங்குவது உள்ளிட்ட விவகாரங்களில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர் ஆணையம் ஆகியவற்றிற்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசால் கட்டப்பட்டுள்ள அணைகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சேமிப்பு திட்டங்கள் மூலம் சுமார் 218 டி எம் சி நீர் சேமித்து வைக்கப்படுகிறது , இது பருவமழை காலத்தில் 327 டிஎம்சி ஆக அதிகரிக்கும், இந்த கணக்கை பார்க்கும் போது கர்நாடகாவுக்கு நீதிமன்றத்தால் ஒதுக்கப்பட்ட பங்கான 284.75 டி எம் சி நீரை விட அதிகமாகும்.
அவ்வாறு அதிகமாக சேமிக்கப்படும் நீரை நகரங்களின் குடிநீர் தேவைக்கு பூர்த்தி செய்ய பயன்படுத்தலாம் அதுவே போதுமானதாகவும் இருக்கும் . எனவே புதிதாக ஒரு அணையை நீர் தேவைக்கு என்று கட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனவே புதிய நீர்த்திட்டங்கள் தொடர்பாக எந்த ஒரு பரிசீலனையும் செய்ய தேவையில்லை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கான பரிசீலனை மற்றும் அனுமதி உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முடிவெடுக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை ரத்து செய்ய வேண்டும்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்” என்று தமிழக அரசு தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளது




