அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் அறிஞர்களின் அருமை தெரியவில்லை: சீமான்

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் அறிஞர்களின் அருமை தெரியவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பட்டிமன்ற பேச்சாளரும் இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், திருநெல்வேலியில் உள்ள…

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் அறிஞர்களின் அருமை தெரியவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பட்டிமன்ற பேச்சாளரும் இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார். நெல்லை கண்ணன்  மகன்கள் மற்றும் உறவினர்களை ஆரத் தழுவி ஆறுதல் தெரிவித்தார்.


சிறிது நேரம் நெல்லை கண்ணன் பற்றி அவரது உறவினர்களுடன் உரையாடிய பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய சீமான், “முழுக்க முழுக்க தமிழ் இனம் சார்ந்து நின்றவர் நெல்லை கண்ணன். தமிழ்த்தாய் தன் செல்ல மகனை தன் அன்பு மகனை இழந்து விட்டாள் என்பது தான் உண்மை. இந்த தலைமுறை தமிழ் எழுத படிக்க தெரியாமல் வளர்ந்து வரும் சூழ்நிலையில் இதுபோன்ற தமிழ் ஆளுமைகள் இனி வர முடியுமா” என்றார்.

தமிழ் அறிஞர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து, வைகோ போன்ற சில ஆளுமைகள் தான் தற்போது இருப்பதாக குறிப்பிட்டவர்,  அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழ் அள்ளிப் பருகுபவர்களாக இல்லை என்றும் அதனால் தமிழ் அறிஞர்களின் அருமை அவர்களுக்கு தெரிவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.