பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, மது போதையில் ஆண் நண்பருடன் இருந்த கல்லூரி மாணவியின் மண்டையை உடைத்த முன்னாள் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த ஜாபியா ஜாஸ்மின், நேற்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது குளச்சல் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது பங்களா வீட்டில் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடி கொண்டிருக்கும் போது, தனது பள்ளி தோழன் அஜின் என்பவர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தனது நண்பர்களை கட்டையால் தாக்கியதோடு, தனது மண்டையையும் உடைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். அவரது புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த போலீசார், பங்களா வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசாருக்கு பல அதிர்ச்சி தரும் தகவல்கள் காத்திருந்தன.
பெரிய பங்களாவில், உபயோகிக்கப்பட்ட சிகரெட் துண்டுகள், ஆங்காங்கே வீசப்பட்ட நிலையில் ஆடைகள், ஆணுறைகளை கண்டு போலீசார் திகைத்து நின்றனர். இதையடுத்து புகார் அளித்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜாபியா ஜாஸ்மினும், அஜினும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இரவில் அஜினுக்கு தெரியாமல், ஜாபியா ஜாஸ்மின் ஆண் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதனை அறிந்து கொண்ட அஜின் பல முறை எச்சரித்தும் ஜாபியா ஜாஸ்மின் மாறாததால் இருவரும் பிரிந்துவிட்டனர். சம்பவத்தன்று பங்களாவிற்குள் சென்ற அஜின், ஜாபியா ஜாஸ்மின் ஆண் நண்பர்களுடன் இருப்பதை கண்டு, அனைவரையும் கட்டையால் தாக்கிவிட்டு, ஜாபியா ஜாஸ்மினின் மண்டையையும் உடைத்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.
போலீசார் அஜினை தீவிரமாக தேடி வரும் நிலையில், அஜினின் தாயார், அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஜாபியா ஜாஸ்மினால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், தனது மகன் மீது நடவடிக்கை எடுக்ககூடாது எனவும் தெரிவித்துள்ளார். இந்த ஆதாரங்களை சேகரித்த போலீசார், ஜாபியா ஜாஸ்மின் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







