வேலையில்லாத் திண்டாட்டத்தை கண்டித்து டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதிக அளவில் விவசாயிகள் கூடுவதை தடுக்க காஜிபூர் உள்ளிட்ட டெல்லியின் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இருப்பினும், காவல்துறையினரின் தடுப்பை மீறியும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
“கர்ணல் புறவழிச்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. நாங்கள் இந்தப் போராட்டத்தை அமைதியாக மேற்கொள்கிறோம், எங்கள் போராட்டம் ஒரு நாள் மட்டுமே, வெகு தொலைவில் இருந்து விவசாயிகள் வந்து குவிய அனுமதிக்க வேண்டும், வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.” என்று பாரதிய விவசாயிகள் சங்கப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
காஜிபூர் எல்லையில் “மேலும் குழுக்கள் வருவதால்” சில விவசாயிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த விவசாயிகள் மதுவிஹார் மற்றும் பிற காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.