பழனி தண்டாயுதப்பாணி கோவிலின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகளுக்கான முதற்கட்ட பணிகளை மேற்கொள்வதற்கான ஆய்வு தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதப்பாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்லும் இப்புனித தலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் கூட்டம் அதிகரிப்பால் கடுமையான இடநெருக்கடி ஏற்படுகிறது.
இந்நிலையில் கோவிலின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்திருந்தது.
அதன்படி முதற்கட்டமாக பழனி கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறபடுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக 58 ஏக்கர் தனியார் நிலங்களை கையகப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணி திட்டமிடப்பட்டது. இதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகள் நிலங்களை அளவீடு செய்து, எல்கைகளை வரையறுக்கும் பணியினை கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் தொடங்கினர்.
—வேந்தன்







