மதுரை சித்திரை திருவிழாவின் 8 ஆம் நாள் திருநாளான நேற்று, மதுரையின் அரசியாக மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய விழாக்களில் ஒன்றான பட்டாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற இந்த விழாவில், மதுரையின் அரசியாக மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டப்பட்டது. இதற்காக, மணிமுடியும், செங்கோலும் யானை மீது ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பட்டாபிஷேக விழா நடைபெற்ற இடத்தில் 500 கிலோ எடை கொண்ட மல்லிகை, முல்லை, பிச்சி உள்ளிட்ட பூக்களைக் கொண்டு பந்தல் அமைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பாரம்பரிய முறைப்படி பட்டாபிஷேக விழாவை நடத்தினார்கள். விழாவைக் காண, மதுரை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் கோயிலில் குவிந்தனர்.
மதுரை சித்திரை திருவிழாவின் மற்றுமொரு முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாநகர் காவல் துணை ஆணையர்களான தங்கதுரை மற்றும் ராஜசேகர் ஆகிய இருவரும், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். கோபுர வாசல்கள் வழியாக வருகை தரும் பக்தர்களை பலத்த சோதனைக்கு பின்பே கோவிலுக்குள் அனுமதிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வரும் 16ம் தேதி, வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் திருவிழா நடைபெற உள்ளது. இதை ஒட்டி, ஆழ்வார்புரம் பகுதியில் வைகை ஆற்றுப்பகுதியில் பந்தல் மற்றும் தண்ணீர் தொட்டி அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.