சமூகநீதி பாதையில் திமுக அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டும் ஆட்சியாக உள்ளதாக தெரிவித்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக 40 கோடி ரூபாய் செலவில் நவீன விடுதி கட்டப்படும் என அறிவித்தார். வன்கொடுமையை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் என்னை சந்தித்து, ஆகஸ்ட் 15 விடுதலை நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் இதுவரை நடைபெற்று வந்த சமபந்தி போஜனம் என்பதை பெயர் மாற்ற வேண்டுமென்று ஒரு வேண்டுகோளை எடுத்து வைத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று இனிமேல் சமத்துவ விருந்து என்று பெயர் மாற்றம் செய்யப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.








