பீகார் அருகே சென்றுகொண்டிருந்த வடகிழக்கு அதிவிரைவு ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 70 பேருக்கு மேல் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியிலிருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் சென்றுகொண்டிருந்த வடகிழக்கு அதிவிரைவு ரயில் (12506) பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்றிரவு சுமார் 9.53 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மேலும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனைதொடர்ந்து அந்த தடத்தில் பயணிக்கும் 21 ரயில்கள் தடம் திருப்பிவிடப்பட்டுள்ளன.
காயம் அடைந்த பயணிகளை மீட்புக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளுடன் விபத்து நிவாரண வாகனம் சம்பவ இடத்திற்கு புறப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்து சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லை என்றும் கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகியுள்ளதாகவும் 70 பேருக்கும் மேல் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப் பணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் உஷார் நிலையில் உள்ளது. ஆம்புலன்சுகள், பேருந்துகள் மீட்புப்பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், ரத்த வங்கி தயார்நிலையில் உள்ளது என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக விபத்து குறித்து தகவல் அறிய ரெயில்வே தரப்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதன்படி
பாட்னா ரயில்நிலையம்:- 97714 49971
தனபூர் உதவிமையம்:- 89056 97493
COMM CNL:- 77590 70004
ARA helpline:- 83061 82542
பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் சந்திப்பு– 9794849461, 8081206628
ஆகிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள News7 Tamil – ன் WhatsApp Channel– ல் இணைய – க்ளிக் செய்யுங்கள்!







