பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது – இபிஎஸ் கண்டனம்

பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,

“பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 2021 தேர்தலின் போது, அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நீங்கள், “ஆட்சி அமைந்ததும், பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கையை திமுக நிறைவேற்றும்… ஆக” என்று படித்த துண்டுசீட்டு இப்போது தொலைந்து விட்டதா? சிறை நிரப்பும் போராட்டம் செய்யும் அளவிற்கு பகுதி நேர ஆசிரியர்களை இந்த திமுக அரசு தள்ளியிருப்பது வெட்கக்கேடானது. அதே போல, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ரமேஷ் பாபு கத்தியால் குத்தப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே, சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட போதே, அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், இது ஸ்டாலின் மாடல் அல்லவா? வழக்கம் போல கடந்து சென்றதன் விளைவே இந்த சம்பவம். அரசு மருத்துவமனையில், அதுவும் மருத்துவருக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை; இதற்கு முதலமைச்சரே பொறுப்பு! வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி, அவர்களை தெருவில் போராட நிறுத்தியதோடு அல்லாமல், அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைக்கு தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியுள்ளது.

கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், எந்தவித சட்ட நடவடிக்கையும் இன்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்; ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவரை தாக்கிய நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.