ஆளுங்கட்சியின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் எதிர்க்கட்சிகள்

நாட்டில் பெரும் புயலை கிளப்பியிருக்கும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், நாடாளுமன்றத்தையே முடக்கி வைத்திருக்கிறது. கடந்த 19-ம் தேதி, மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் இன்றுவரை, முழுமையான விவாதம் எதுவும் நடைபெறவில்லை. கூட்டத்தொடரின் துவக்கம் முதலே…

நாட்டில் பெரும் புயலை கிளப்பியிருக்கும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், நாடாளுமன்றத்தையே முடக்கி வைத்திருக்கிறது.

கடந்த 19-ம் தேதி, மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் இன்றுவரை, முழுமையான விவாதம் எதுவும் நடைபெறவில்லை. கூட்டத்தொடரின் துவக்கம் முதலே பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்களை கையிலெடுத்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், இரு அவைகளும் முடங்கி உள்ளன.

விவசாயிகள் பிரச்னை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளையும் எழுப்பி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், 12-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் என தமிழில் குரலெழுப்பியதும் அரங்கேறியது.

முன்னதாக, ‘பெகாசஸ்’ தொடர்பான அறிக்கையை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் கைகளில் இருந்து பறித்து, திரிணாமூல் எம்.பி. சாந்தனு சென் கிழித்தெறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்தார் மாநிலங்களவைத் தலைவர்.

இதனிடையே, அவை நடவடிக்கையை குலைக்கும் வகையில் அமளியில் ஈடுபடும் எம்பிக்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரித்திருந்தார். அதன் எதிரொலியாக மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் டோலா சென், நடிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், ஷாந்தா சேத்ரி உள்ளிட்ட 6 பேரும், ஒரு நாள் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மழைக்கால கூட்டத்தொடரிலேயே 30-க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளியால் மசோதாக்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த அமளிகளுக்கு நடுவே, அத்தியாவசிய பாதுகாப்பு மசோதா, திவால் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், தீர்ப்பாய சீர்திருத்தங்களுக்கான மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபை நடவடிக்கைகளை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபடுவது ஜனநாயக மாண்பை மீறுவது என்றும், நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும், எதிர்க்கட்சி எம்.பி.க்களை பிரதமர் மோடி சாடிய நிலையில், பெகாசஸ் விவகாரம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து இதுவரை பிரதமர் பதிலளிக்காமல் இருப்பது தான் ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்றும், எதிர்க்கட்சி எம்பிக்களும் விமர்சித்துள்ளனர்.

தற்போது மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறும் என்றாலும், ஆளுங்கட்சியின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மீதான இடைநீக்க நடவடிக்கை, பிற கட்சிகளின் மீது பாயுமா? தொடர் அமளி நீடிக்குமா? என்பதையெல்லாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்….

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.