யாஷிகாவின் கலைப்பயணத்தை தடுமாறச் செய்த விபத்து

  நடிகை யாஷிகாவின் பிறந்தநாள் இன்று. “கோலிவுட்டில்” வேகமாக வளர்ந்து வரத் தொடங்கிய இளம் நடிகைகளில் யாஷிகாவுக்கும் முக்கிய இடம் உண்டு. இன்ஸ்டாகிராம் மாடலாக தனது பயணத்தை தொடங்கிய யாஷிகா ஆனந்த், “கவலை வேண்டாம்”…

 

நடிகை யாஷிகாவின் பிறந்தநாள் இன்று. “கோலிவுட்டில்” வேகமாக வளர்ந்து வரத் தொடங்கிய இளம் நடிகைகளில் யாஷிகாவுக்கும் முக்கிய இடம் உண்டு. இன்ஸ்டாகிராம் மாடலாக தனது பயணத்தை தொடங்கிய யாஷிகா ஆனந்த், “கவலை வேண்டாம்” திரைப்படத்தில் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். “துருவங்கள் பதினாறு” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர். நோட்டா, இருட்டு அறையில் முரட்டு குத்து, பாடம், கழுகு 2, மணியார் குடும்பம், ஜாம்பி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்த யாஷிகா, சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். 2018-ம் ஆண்டில் சென்னை டைம்ஸ் பத்திரிக்கையின், தொலைக்காட்சியில் அதிகம் விரும்பப்பட்ட பெண்களின் பட்டியலில் யாஷிகா இடம்பெற்றார்.

யாஷிகா நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் ‘கடமையை செய்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இவர் நடித்த ராஜ பீமா மற்றும் பாம்பாட்டம் ஆகிய இரு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இதனிடையே, கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதியன்று யாஷிகா தனது நண்பர்களுடன் காரில் சென்றபோது, இரவு ஒரு மணியளவில் அவர் ஓட்டி வந்த கார், மாமல்லபுரம் சாலையில் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா, தனது தோழி பவானியை அதே கார் விபத்தில் இழந்தார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்ட யாஷிகா, தான் இம்முறை பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்றும், தனது ரசிகர்களும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தான் வாழும் நாட்களெல்லாம் குற்ற உணர்ச்சியோடு வாழப்போவதாகவும், தனக்கு இது மறுபிறப்பு என்றும் யாஷிகா உருக்கமாக கூறியுள்ளார்.

தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் நடிகை யாஷிகா, தன்னால் அடுத்த 5 மாதங்களுக்கு எழுந்து நிற்கவோ நடக்கவோ முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான், தான் வாகனம் ஓட்டும்போது மது போதையில் இல்லை என்றும், தவறான தகவல்களை சிலர் பரப்புகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். வெள்ளித்திரையில் பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறந்த நடிகை யாஷிகாவின் பிறந்தநாள், எதிர்பாராத விபத்தால் இம்முறை எந்த கொண்டாட்டமும் இன்றி கடந்து செல்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.