பரந்தூர் விமான நிலையம்; ஓராண்டை எட்டிய பொதுமக்களின் போராட்டம்!

சென்னையின் 2-வது விமானநிலையத்தை பரந்தூரில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் ஓராண்டை எட்டியுள்ளது. பரந்தூர் விமான நிலையம் குறித்தும் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்……

சென்னையின் 2-வது விமானநிலையத்தை பரந்தூரில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் ஓராண்டை எட்டியுள்ளது. பரந்தூர் விமான நிலையம் குறித்தும் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்…

இந்தியாவில் வளர்ச்சி பெற்ற கட்டமைப்பு வசதி மிகுந்த மாநிலங்களில் முதன்மையானது தமிழ்நாடு. இங்கு பொருளாதார வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் முதலீட்டாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக கட்டமைப்பு வசதிகளும் வலுப்படுத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில் தான் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அது பரந்தூரில் அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 2 கோடியே 5 லட்சம் பயணிகளை கையாண்டு வருகிறது. இது, அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி பயணிகளாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதியதாக பரந்தூரில் அமைய இருக்கும் விமான நிலையம் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளக் கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஓடுதளங்கள், விமான நிலைய முனையங்கள், இணைப்பு பாதைகள், சரக்கு கையாளும் முனையம் என உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமையப்போகும் இந்த விமான நிலையத்தின் உத்தேச திட்ட மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

பரந்தூர் விமான நிலையம் தொடர்பான, தொழில்நுட்ப பொருளாதார ரீதியிலான விரிவான அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதோடு நில எடுப்புக்கான முதற்கட்ட அனுமதி கோரி டிட்கோ மூலம் மத்திய விமான போக்குவரத்துத்துறையிடம் விண்ணப்பமும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய விமான நிலையம் அமைப்பதில் உறுதியாக இருக்கும் தமிழ்நாடு அரசு எந்த அளவுக்கு அந்த பணிகளை தீவிரப்படுத்துகிறதோ அதே அளவுக்கு மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியுள்ளது. புதிய விமானநிலையம் அமைக்கப்படும் இடம் பரந்தூர் என அறிவிக்கப்பட்ட நாள் முதலே பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் போராட்டங்களை தொடங்கினார்.

அதிலும் ஏகானாபுரத்தில் இரவு, பகலாக தொடரும் போராட்டம் ஓராண்டை கடந்திருக்கிறது. இந்த திட்டத்திற்காக சுமார் 4 ஆயிரத்து 500 ஏக்கர், விளைநிலங்கள், நீர்நிலைகள், குடியிருப்புகள் மற்றும் பாசன கால்வாய் கையகப்படுத்தப்படும் என்பதால் அப்பகுதி மக்களின் போராட்டம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

காந்திஜெயந்தி, உள்ளாட்சிகள் தினம், உலக தண்ணீர் தினம், உழைப்பாளர் தினம் குடியரசு மற்றும் சுதந்திர தினம் என கிராமசபை கூட்டம் நடைபெறும் அனைத்து நாட்களிலும் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உப்பளம் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான, விவசாயம் செய்ய முடியாத ஐந்தாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை பயன்படுத்தி அங்கு விமான நிலையத்தை அமைக்கலாம் என பாமக தலைவர் அன்புமணி அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.

சென்னைக்கு இரண்டாவது விமானநிலையம் அவசியமானது என்றாலும் மக்களையும் விவசாய நிலங்களையும் பாதிக்கும் வகையில் அதனை அமைக்க கூடாது எனவும், அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசியல் கட்சித்தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தினர். அரசு சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் அதிகளவில் எதிர்ப்புகளையே பதிவு செய்தனர். பொதுமக்களின் எதிர்ப்பு குரல் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்வதோடு நேரில் சென்றும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் மக்களை சந்திக்க கூடாது என்பதற்காக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள், உங்களின் அனுமதியின்றி விமான நிலையம் அமைக்கப்படாது என சமாதானப்படுத்திவிட்டு மற்றொரு பக்கம் அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. விமான நிலையம் அமைக்கப்படாது என அரசு அறிவிக்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என மக்கள் அறிவித்துள்ளனர். அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான போராட்டம் ஓராண்டை தொட்டிருக்கிறது. அரசும் செவிசாய்த்தபாடில்லை. மக்களும் போராட்டத்தை கைவிடுவதாக தெரியவில்லை.

விக்னேஷ், நியூஸ் 7 தமிழ், சென்னை

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.