ஹைதராபாத்தில் நடந்த எல்ஜிஎம் பட நிகழ்ச்சியில் தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனி கலந்து கொண்டு பேசும் போது ”நான் அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகை” என கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனி இணைந்து தோனி என்டர்டெயின்மென்ட் என்கிற திரைப்படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதில் முதல் திரைப்படமாக அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் எல்ஜிஎம் (லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற தமிழ் படத்தை தயாரித்துள்ளனர்.
ஹரீஸ் கல்யாண், இவானா நடித்துள்ள ‘எல்ஜிஎம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வருகிற ஜூலை 28ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தயாரிப்பாளரான சாக்ஷி சிங் தோனி இதற்கான புரோமோஷன் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதோடு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்ஷி சிங் தோனி பல சுவாரஸ்யமான கருத்துக்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துக் கொண்டார். அதில் குறிப்பாக, நான் அல்லு அர்ஜுனின் அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன், நான் அவருடைய தீவிர ரசிகை, இதுவரை அவருடைய எந்தப் படத்தையும் நான் தவறவிட்டதில்லை, OTT இல்லாத காலத்திலேயே, Gold Mine யூடியூப் சேனல்களில் அல்லு அர்ஜுனின் அனைத்து படங்களையும் பார்த்து வளர்ந்தவள் நான் என சாக்ஷி சிங் தோனி பேசிய பேச்சு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்நிகழ்வு தெலுங்கு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு, அல்லு அர்ஜுன் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துவிட்டது.
- பி.ஜேம்ஸ் லிசா







