ராஜபாளையம் அருகே கட்டட வரைபட அனுமதிக்காக ரூ.6000 லஞ்சம்: ஊராட்சி மன்ற தலைவர் கைது!

ராஜபாளையம் அருகே கட்டட வரைபடத்திற்காக அனுமதி வழங்குவதற்கு ரூ. 6000 லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி மன்ற தலைவரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழ ராஜகுல…

ராஜபாளையம் அருகே கட்டட வரைபடத்திற்காக அனுமதி வழங்குவதற்கு ரூ. 6000 லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி மன்ற தலைவரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழ ராஜகுல ராமன் பகுதியைச்
சேர்ந்தவர் பொன் பாபா பாண்டியன். அதே பகுதியில் இவரது மனைவி ரூபா ராணி
என்பவருக்கு சொந்தமான காலி இடம் இருந்துள்ளது. இந்த நிலத்தில் வீடு
கட்டுவதற்காக வரைபட அனுமதி வேண்டி கீழ ராஜகுலராமன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். வரைபட அனுமதிக்காக அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ₹. 17,910 ஐ ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொன் பாபா பாண்டியன் செலுத்தி உள்ளார். இதற்கான ரசீதும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வரைபடம் அனுமதி வழங்கப்படவில்லை.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்துவிடம், பொன் பாபா பாண்டியன்
கேட்டபோது வரைபட அனுமதி வழங்க தனக்கு ₹. 10,000 லஞ்சமாக வழங்குமாறு
கூறியுள்ளார். இதற்கு பொன் பாபா பாண்டியன் மறுப்பு தெரிவிக்கவே, ₹. 6 ஆயிரம்
மட்டும் வழங்கினால் போதும் என ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஊராட்சி தலைவர் லஞ்சம் கேட்டது குறித்து பொன் பாபா பாண்டியன்  விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து நேற்று காலை 11 மணிக்கு பணத்தை தன்னிடம் கொண்டு வந்து கொடுக்குமாறு ஊராட்சி தலைவர் காளிமுத்து கூறியுள்ளார். பின்னா் ரசாயனம் தரப்பட்ட ரூபாய் நோட்டுக்களை பொன் பாபா பாண்டியன் ஊராட்சி மன்ற தலைவரிடம் அளித்த போது மறைது நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் ஊராட்சி
மன்ற தலைவர் காளிமுத்துவை கையும் களவுமாக கைது செய்தனர்.

இதனையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தின் வரவு செலவு கணக்குகள் குறித்தும் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆய்வு நடத்தினர். மேலும் ஊராட்சி மன்ற தலைவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேல் விசாரணை மேற்கொண்டனர். பி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.