மாணவர்களின் சிறு சேமிப்பை பள்ளிக்கே வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

அரசு பள்ளி மாணவர்களின் சிறு சேமிப்பு பணத்தை பள்ளி சீரமைப்பு பணிக்கே வழங்கிய ஆட்சியரின் செயல் அனைவரிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு…

அரசு பள்ளி மாணவர்களின் சிறு சேமிப்பு பணத்தை பள்ளி சீரமைப்பு பணிக்கே வழங்கிய ஆட்சியரின் செயல் அனைவரிடமும் வரவேற்பு பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த 45 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகளிடம் சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மாணவர்களே உண்டியல் மூலம் பெற்றோர்கள் வழங்ககூடிய பணத்தை ஒவ்வொன்றாக சேகரித்து வந்தனர்.

அதன்படி கடந்த 6 மாதங்களாக மாணவர்கள் சேர்ந்து வைத்த உண்டியல் பணம் ரூ.2023 ஐ
பள்ளியின் மாணவர்கள் சஞ்சனா, லலிதாம்பிகை, துளசிராஜா ஆகியோர் பெற்றோருடன் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்து பின்னர்
ஆட்சியர் உமாவிடம் அந்த பணத்தை வழங்கினர்.

மாணவர்களை பாராட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர் உமா எருமப்பட்டி ஒன்றிய அலுவலரிடம் உண்டியல் பணத்தை வழங்கி மாணவர்களின் பள்ளிக்கே அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிட்டார். மேலும் இந்த பணம் எதற்காக செலவு செய்யப்பட்டது என தான் விசாரிப்பேன் எனவும் அலுவலரிடம் தெரிவித்தார்.

சக மாணவர்களிடம் உண்டியல் மூலம் சேகரித்த பணத்தை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு
வழங்கிய நிலையில் அதனை அந்த பள்ளியின் அடிப்படை தேவைக்கே திருப்பி வழங்கிய சம்பவம் அதிகாரிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

–ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.