மழையால் தேங்கி நிற்கும் தண்ணீரால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதால், உடனடியாக கழிவு நீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என்று பள்ளிக்கரணை பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் வடியாமல் இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தேங்காமல் இருக்க என்ன தீர்வு?” என நியூஸ் 7 தமிழ், இன்று தொடர் நேரலையை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்கிறது.
இந்நிலையில் பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகர் பகுதி மக்கள் நமது செய்தியாளரி டம் கூறியதாவது:
இந்தப் பகுதியில வசிக்கிறது பெரும்பாலும் அடிதட்டு மக்கள்தான். இங்க முழங்கால் அளவுக்கு கடந்த 2 வாரமா மழை நீர் தேங்கி இருந்தது. தரமான சாலையோ, மழை வடிகாலோ, சாக்கடை செல்வதற்கான வழியோ இங்க இல்லை. சாலை வசதி சரியா இல்லாததால, கற்களை நாங்களே கொட்டி வழி ஏற்படுத்தி நடந்து போயிட்டு இருக்கோம். கழிவு நீர் வடிகால் இல்லாததால, கடும் பாதிப்பை சந்திச்சு வர்றோம்.
கழிவு நீர், மழைத்தண்ணியோட கலந்து சாக்கடையா மாறிப்போச்சு. இதுக்கு தீர்வு காண, 10 வருஷமா நாங்க மழை நீர் கால்வாய் கேட்டு அதிகாரிகள்ட்ட கோரிக்கை வைச்சிருக்கோம். எந்த நடவடிக்கையும் இல்லை. சுகாதார சீர்கேட்டால, சில பேருக்கு டெங்கு வந்திருக்கு. பலர் பாதிக்கப்பட்டிருக்காங்க. அதனால அரசு உடனடியா இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கணும். இவ்வாறு அவர்கள் கூறினர்.








