பழநி கோயிலுக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத கார்மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழநி முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி தஞ்சாவூர் மேலவந்தசாவடி பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை சாமிநாதன், மகன்கள் தவப்பிரியன், கமலேஷ் மற்றும் உறவினர் சேகர் ஆகியோர் ஒட்டன்சத்திரம் வரை காரில் வந்து ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.
சத்திரப்பட்டி அருகே சென்றபோது நான்கு பேர் மீதும் அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.இதில் தந்தை சாமிநாதன், உறவினர் சேகர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மகன்கள் கமலேஷ் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கும், தவப்பிரியன் பழனி அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி கமலேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சத்திரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









