மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் 2 நாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மத்திய அரசின் மின்சார திருத்த சட்டம், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
‘மக்களைக் காப்போம், நாட்டைக் காப்போம்’ என்ற முழக்கத்துடன் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்து காலை போராட்டத்தை துவங்கியுள்ளனர்..
அதன்படி, இந்த வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் பெரும்பாலும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. குறைந்து அளவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால், பொது மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.அதேபோல், தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிஐடியு, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அண்ணா தொழிற்சங்கம் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
போக்குவரத்து, மின் துறை, வங்கி பணியாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இதனால் பல்வேறு பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனிடையே இன்றும் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.








