#Pakistan | கராச்சி விமான நிலையத்தை உலுக்கிய வெடிவிபத்து … 2 பேர் பலி, 8 பேர் படுகாயம்!

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு அருகே நடந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் சிந்து மகாண தலைநகரான கராச்சியில் நேற்று இரவு 11 மணியளவில் மர்ம…

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு அருகே நடந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானின் சிந்து மகாண தலைநகரான கராச்சியில் நேற்று இரவு 11 மணியளவில் மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. விமான நிலையம் அருகே இந்த சம்பவம் நடைபெற்றது. கராச்சி நகரமே குலுங்கும் அளவுக்கு பயங்கர சத்தம் கேட்டதால், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகே வசித்த மக்கள் பீதியடைந்தனர். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விமான நிலையத்திற்கு வெளியே நின்றிருந்த டேங்கர் லாரி வெடித்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொழுந்துவிட்டு எரிந்த தீ அருகில் இருந்த கார்களிலும் பரவிய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில், உயிரிழந்த இருவரும் சீனர்கள் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும், இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்று குறிப்பிட்டு தங்களது கண்டனத்தை சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து, கராச்சி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள இடங்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.