தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த வெள்ளிகிழமை தஞ்சாவூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் தமிழக அரசுக்கு மத்திய நிதியமைச்சகம் அனுப்பிய கடிதம் ஒன்றில் நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை மாநில அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியிட்டிருந்த பதிவில் ஊட்டச்சத்து பாதுகாப்பு, சுயசார்பு மற்றும் நிலையான விவசாயம் ஆகியவற்றுக்கு ஏற்ப, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க மாநிலங்கள் தங்கள் ஊக்கத்தொகை கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் என 09.01.2026 அன்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. இது ஒரு ஆலோசனையே தவிர, கட்டாய உத்தரவு அல்ல என தெரிவித்திருந்தார். ஆனால் இது தொடர்பாக இருவருக்கும் வார்த்தை போர் நீடித்து வந்தது.
இதற்கிடையில் மத்திய அரசு தரப்பில் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது ;
மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே, தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள். அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது.
மேலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தாங்கள் தெரிவித்திருப்பதும் உண்மைக்குப் புறம்பானது. கடந்த பிப்ரவரி மாதம், மாண்புமிகு கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் இதுகுறித்து வெளியிட்ட பதிவே இதற்குச் சாட்சி!
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.








