அனைத்து வகை பள்ளிகளிலும் நாளை காலை 10.30 மணிக்கு மாணவர்கள் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் காவல்துறையினர் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, போதை பழக்கத்தை கண்டறிந்து கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பள்ளிகளில் போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், போதை பழக்கத்தில் இருந்து எவ்வாறு வெளியே வரவேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அனைத்து பள்ளிகளிலும் வருகிற 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை போதை விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து வகை பள்ளிகளிலும் போதை விழிப்புணர்வு உறுதிமொழியை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ள நிலையில், பள்ளிகளில் போதை விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க படுவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் வெளியே வரவேண்டும் என வலியுறுத்தி நமது நியூஸ் 7 தமிழும் விழிப்புணர்வை நிகழ்ச்சியை கையில் எடுத்தது. கடந்த ஜீலை 1-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை ஒவ்வொரு பள்ளிகளிலும் வேண்டாம் போதை என்ற தலைப்புடன், மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்தது. அதுமட்டும் இல்லாமல் போதை பழக்கத்திற்கு ஆளாவதால் ஏற்படும் தீமைகளையும், அதில் இருந்து வெளிவரும் நம்பிக்கையும் நியூஸ் 7 தமிழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
நியூஸ் 7 தமிழின் வேண்டாம் போதை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு அரசு முதல் அரசியல் தலைவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ஊடக துறையில் இதுபோன்ற பொதுநலனை ஏற்படுத்தியதற்கு நியூஸ் 7 தமிழுக்கு அவர்கள் நன்றியும் தெரிவித்தனர்.
– இரா.நம்பிராஜன்