செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா- தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு

சென்னையில் நேற்று நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மிகச் சிறப்பாக அமைந்ததாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட்  தொடர் முதல் முறையாக சதுரங்க போட்டியின் பிறப்பிடமான…

சென்னையில் நேற்று நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மிகச் சிறப்பாக அமைந்ததாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட்  தொடர் முதல் முறையாக சதுரங்க போட்டியின் பிறப்பிடமான இந்தியாவில் நடைபெற்றது. இந்த பெருமையை பறைசாற்றும் வகையில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசு மிகப் பிரம்மாண்டமாக நடத்தியது.  கடந்த மாதம் 28ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மாமல்லபுரத்தில் கடந்த 13 நாட்களாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடர் நேற்று நிறைவு பெற்றது. இதையொட்டி நேற்று சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிறைவு விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பல நடைபெற்றன. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குரல் பின்னணியில் ஒலிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப்போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை நடனக் கலைஞர்கள் தத்ரூபமாக நடித்துக்காட்டியது பார்வையாளர்களை பரவச்சப்படுத்தியது. இதே போல் டிரம்ஸ், வீணை, கிட்டார், புல்லாங்குழல் ஆகிய 4 இசைக் கருவிகள் இசைக்கப்பட்டு நடைபெற்ற பியூசன் இசைக் கச்சேரியும் பார்வையாளர்களின் காதுகளுக்கு விருந்தாக அமைந்தன.  மும்பையைச் சேர்ந்த ” WE UNBEATABLE” குழுவினரின் நடன சாகச நிகழ்ச்சியும் பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்தது.

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவை சிறப்பாக நடத்தியதற்காக தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  தனது  டிவிட்டர் பக்கத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்ச்சியை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மிகச் சிறப்பாக அமைந்ததாக தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், தமிழர்களின் கலாச்சாரம், விளையாட்டு தோன்றிய வரலாறு, தமிழர்களின் வலிமை ஆகியவை நிகழ்ச்சியில் தத்ரூபமாக சித்தரித்துக்காட்டப்பட்டதாக பாராட்டு தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த உலகமும் இந்த நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்ததாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.