ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஓரணியில் ; ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்களா…? அதிமுகவில் அடுத்தது என்ன ?

ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஓரணியில்  இணைகின்றனர். அதிமுகவில் அடுத்தது என்ன நடக்க உள்ளது விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி…

ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஓரணியில்  இணைகின்றனர். அதிமுகவில் அடுத்தது என்ன நடக்க உள்ளது விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி சையது கான் ஆகியோர் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளனர். அவர்களை வாசலில் காத்திருந்து அழைத்துச் சென்று அரை மணி நேரம் பேசியுள்ளார் டிடிவி தினகரன். சந்திப்பிற்கு பின்னர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ’அதிமுகவை மீட்டெடுக்க இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் தொண்டர்களை ஒருங்கிணைப்போம். கட்சியை உண்மையான தொண்டர்களிடம் கொண்டு செல்வோம்.’’ என்று தெரிவித்தனர்.

குறிப்பாக, மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், ‘தொண்டர்களின் கோரிக்கையையடுத்து தலைவர்கள் இணைந்திருக்கிறார்கள். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.’’ என்றார்.

லட்சியத்திற்காக இணைந்துள்ளோம் – டிடிவி தினகரன்

டிடிவி தினகரன் கூறுகையில், “ ஓபிஎஸ் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட அன்பு உண்டு. இருவரிடையே மனதளவில் பகை உணர்வு கிடையாது. அவர் கையைப் பிடித்துக் கொண்டு இருட்டில் கூட நடக்கலாம். இபிஎஸ் அப்படியல்ல. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களிடம் கட்சி இருக்க வேண்டும். லட்சியத்தை அடைவதற்காக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். இதில், சுயநலம் இல்லை. எங்களைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி துரோகி, திமுக பொது எதிரி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை கபளீகரம் செய்தவர்களிடம் இருந்து கட்சியை மீட்டெடுப்பதற்காக’’ என்றார்.

அதிமுகவை மீட்டெடுப்போம் – ஓபிஎஸ்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவின் அனைத்து தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கான முயற்சி தான் இந்த சந்திப்பு. அனைவரும் ஒன்றிணைந்து இயக்கத்தை வழி நடத்த வேண்டும் என்பதனை திருச்சி மாநாட்டின் மூலமாக தொண்டர்கள் உணர்த்தினர். சசிகலாவை சந்திக்க முயற்சித்தோம். அவர் வெளியூர் சென்றிருப்பதால் திரும்பி வந்தவுடன் நிச்சயம் சந்திப்பதாக கூறியிருக்கிறார். விரைவில் அவரை சந்திப்போம். அதிமுகவை மீட்டெடுத்து திமுகவை ஓழிப்போம்” என்றார்.

டெல்லி வழிகாட்டல்…? – பத்திரிகையாளர் ப்ரியன்

செய்தியாளர்களின் ஒரு கேள்விக்கு ‘’உங்களுக்கு விளக்கம் அளித்தே வயசாயிடும் போல’’ என்று நகைச்சுவையாகவும் பேசினார் ஓபிஎஸ். ஆனால், இந்த சந்திப்பு சீரியாஸானது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். டெல்லியில் இபிஎஸ் அமித்ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பின் தொடர்ச்சிதான் இது. டெல்லி சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் அண்ணாமலை கூறுகையில், “கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக. கூட்டணியின் முகம் மோடி. ஆனால், எங்களோடு பயணித்தவர்களை விட்டுவிட மாட்டோம்.’’ என்றார். எனவே, ’’ பாஜகவின் வழிகாட்டுதலில்தான் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. தங்களது செல்வாக்கை காட்ட இருவருமே உள்ள நிலையில், இருவரும் தற்போது சந்தித்துள்ளனர்.’’என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

பாஜக-வின் நெருக்கடி இல்லை – டிடிவி தினகரன்

ஆனால், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், ‘’அமமுக தனிக்கட்சியாக செயல்பட்டு வருகிறது. பாஜக எங்களுக்கு வழிகாட்டவும் இல்லை. அவர்களின் நெருக்கடியும் இல்லை’’ என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், செய்தியாளர் சந்திப்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், ‘’வலது, இடது கம்யூனிஸ்டுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதைப் போல ஓபிஎஸ்- தினகரன் இணைந்து செயல்படுவர்’’ என்றார். அப்போது அருகில் அமர்ந்திருந்த டிடிவி தினகரன் இதை ஆமோதித்தார். இந்த இடத்தில்தான் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

அமமுக-வின் வாக்கு வங்கி

அமமுகவைப் பொறுத்தவரை கடந்த சட்டப்பேரவைத் தேர்தல், அதற்கு முந்தைய மக்களவைப் பொதுத் தேர்தல்களில் ஒரு கூட்டணியை அமைத்து போட்டியிட்டுள்ளனர். குறிப்பிட்ட சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். இந்த இரண்டு தேர்தல்களிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், பல தொகுதிகளில் கணிசமான வாக்கு பெற்றனர். குறிப்பாக, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 20-40 இடங்கள் வரை அதிமுகவின் தோல்விக்கு அமமுகவின் வாக்குகளே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், தலைவர்களின் சந்திப்பும் அதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெற்றுள்ளது.

அதிமுகவிற்கு பாதிப்பில்லை – வைகைசெல்வன்

இந்த சந்திப்பால் அதிமுக-விற்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிறது அதிமுக தரப்பு. குறிப்பாகம் ’’ஓபிஎஸ் அணி, அமமுகவில் இருந்து பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். ஆகையால் நிர்வாகிகளைத் தக்க வைக்க, இருவரும் வேறு வழியில்லாமல் இணைந்திருக்கிறார்கள். அதிமுக என்பது ஒரே கட்சிதான். அதிலிருந்து பிரிந்து அமமுக, ஓபிஎஸ் தலைமையில் ஒரு குழுவும் செயல்படுகிறது. ஆகையால் இவர்கள் இணைவதால் அதிமுக-விற்கு எந்தவித பாதிப்பும் இல்லை’’ என்கிறார் அதிமுக செய்தித் தொடர்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன்.

ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன?

நீதிமன்றங்களின் தீர்ப்பு, தேர்தல் ஆணையத்தின் ஆவணம் என அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு உறுதியானாலும், ’’தற்போது வரை அதிமுக-வின் பொதுச் செயலாளர் நான் தான். அதற்கான சட்டப்போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் முடிவுக்கு வரவில்லை’’ என்று ஓபிஎஸ் தெரிவித்து வருகிறார். அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ‘’இபிஎஸ் தரப்பு கூட்டிய போலி பொதுக்குழு செல்லாது’’ என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். ஆக, அதிமுகவின் ஒரு அணியாக ஓபிஎஸ் தரப்பு தொடருமா…? தனக்கென தனிக்கட்சி தொடங்குவாரா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.

பாஜக கூட்டணியா? தனி அணியா?

அதே போல் கடந்த தேர்தல்களில் தனி அணி அமைத்து களமிறங்கிய அமமுக ஓபிஎஸ்-யுடன் இணைந்து தனி அணி அமைக்குமா? அல்லது பாஜகவுடன் மட்டும் கூட்டணி என்று கூட்டணிக்குள் கூட்டணி என்பது போல் அதிமுகவும் உள்ள கூட்டணியில் அங்கம் வகிப்பார்களா…? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஒருங்கிணைந்த, வலிமையான அதிமுக-வுடன்தான் கூட்டணி என்று டெல்லி மேலிடம் கருதுவதால், கூட்டணியாக ஓரணியில் நிற்கும் வாய்ப்புதான் அதிகம் உள்ளது. குறிப்பாக, வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் அதிமுக 20, பாஜக 20 என்று பங்கீடு இருக்கும். பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடும் பாஜக, மற்ற இடங்களில் அமமுக, ஓபிஎஸ் & கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுக்கும். அதற்கான வியூகம் தான் இந்த சந்திப்பு. தலைவர்களின் அறிவிப்பும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

செல்வாக்கை காட்டும் மாநாடு

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளை கட்சிகள் தொடங்கி விட்ட நிலையில், யார் யாருடன் கரம் கோர்ப்பார்கள் என்பது விரைவில் அரங்குக்கு வந்து விடும் என்கிறார்கள். திருச்சியைத் தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் அடுத்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் ஓபிஎஸ். இந்த மாநாட்டில் சசிகலா, தினகரன் மட்டுமல்ல, இபிஎஸ் முகாமில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்பார்கள்.

அதற்கான பணிகள் தொடங்கி விட்டன. குறிப்பாக, ஸ்லீப்பர் செல்கள் இப்போதும் அதிமுக-வில் இருக்கிறார்கள் என்கிற டிடிவி தினகரன் தெரிவித்ததை குறிப்பிடுகிறார்கள். அவர் தொடர்ந்து குறிப்பிடும் ஸ்லீப்பர் செல்கள் என்பது உண்மையான வியூகமா…? மிரட்டல் ஆயுதமா..? என்பது விரைவில் வெளியில் வரும் என்கிறார்கள் மூத்த தலைவர்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.