தமிழ்நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின், கடந்த ஒரு வருடத்தில் 20 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இவ்வளவு நாள் ஆன்லைன் ரம்மியால் ஆண்களே பாதிக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஆனால், அதற்கு விதிவிலக்காக சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த பவானி என்ற பெண் ஆன்லைன் ரம்மியால் 10 லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மக்கள் தான் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ்குமார் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆன்லைன் ரம்மி விளையாடில் அனைத்து பணத்தையும் இழந்ததை அடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதேபோல, கடந்த 2020-ஆம் ஆண்டு திருச்சியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல லட்சம் பணத்தை இழந்த ஆனந்த் என்ற காவலர் உயிரை மாய்த்துக் கொண்டார். கடந்த 2022 ஜனவரி மாதம் சென்னை பெருங்குடியைச் சேர்ந்த வங்கி ஊழியர் மணிகண்டன் ஆன்லைன் ரம்மியின் மீது நாட்டம் ஏற்பட்டு உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரிடம் கடன் வாங்கி விளையாடியுள்ளார். அந்தவகையில் ஒரு கோடி ரூபாய் வரையில் கடனால் மனைவி, மற்றும் தனது இரு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டார்.
அதேபோல, ஜனவரி மாததில் சென்னை கோயம்பேட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த தினேஷ் மன அழுத்தத்தின் காரணமாக தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார், கடந்த ஏப்ரல் மாதம் போரூர் விக்னேஸ்வரா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபு, இவரது மனைவி ஜனனி என்ற இந்து, தனது குடும்பத்துடன் வசித்து வந்த பிரபு கடந்த ஒரு வருடமாக வேலைக்குச் செல்லாமல் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 35 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘திரைப்பட பாணியில் இரிடியம் விற்பனை; 3 பேர் அதிரடி கைது’
கடந்த மே மாதம் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் சரவணன்குமார். பாதுகாப்புப் பணியில் இருக்கும் போதே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் உயிரை மாய்த்துக் கொண்டார், ஜனவரி மாதம் திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த அபுசலாம். இவருக்கு ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி அதனால் ஏற்பட்ட கடண்டை அடைக்க தன்னுடைய குழந்தையை விற்றுள்ளார். இதற்காக அபுசலாம் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கையும், அதனால், நிகழும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் உடனடியாக திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை இயற்றுவது மட்டும் தான் ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து மக்களை காக்கும் என அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல ஆசையை தூண்டிவிட்டு, பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், பிடித்த நடிகர்கள் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதை பார்த்து ஏமாந்து யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம் என தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். மேலும், ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம், குடும்ப பிரச்னை, உயிரிழப்பு செய்துகொள்ளும் நிலை ஏற்படுகிறது என கூறியுள்ள அவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வருவது மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








