வள்ளலார் சர்வதேச மைய பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும் சத்திய தருமச் சாலை உள்ளிட்ட இடங்களை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக வரைபடத்திற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டன. இதற்கு 11 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 5 வரைபடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த 5 வரைபடங்களை ஆய்வு செய்து முதலமைச்சர் தலைமையில் இறுதி வரை படத்தை இந்த மாத இறுதிக்குள் முடிவு செய்து பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
இந்த சர்வதேச மையம் என்ற பெயருக்கு தகுந்தாற்போல் உலகம் முழுவதிலிருந்து வரும் அனைத்து பக்தர்களின் தங்கும் வசதி, பிரசங்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக சிறப்பாக செயல்படும் என கூறினார்.
மேலும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி முதல் வள்ளலார் முப்பெரும் விழா கொண்டாடப்பட உள்ளதாகவும் அதை ஆண்டு முழுவதும் கொண்டாடும் விதமாக 52 வாரங்கள் கொண்டாடப்படும் என்றார்.








