ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஆறு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்தியா முழுவதும் ஆன்லைன் சுதாட்டத்தை ஆயிரக்கணக்கான மக்கள் விளையாடி வருகின்றனர். இதில் பணத்தை சம்பாதிக்கும் மக்களைவிட பணத்தை இழந்து தவிக்கும் மக்களே அதிகமாக உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான மக்கள், பனத்தை இழக்கும் போது, மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
இதனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. தமிழக சட்டமன்றத்திலும் ஆன்லைன் சூதாட்ட தடைக்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்ததாக பதிவான 17 வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், இவ்வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியுள்ள சிபிசிஐடி, ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சார், ஜங்கிலி ரம்மி , லுடோ, பப்ஜி ஆகிய ஆறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்கள் தொடர்பான விவரங்களை அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.







