உயர்நீதிமன்றங்களில் வெள்ளிக்கிழமைகளில் ஆன்லைன் மற்றும் நேரடி விசாரணை – உயர்நீதிமன்ற பதிவாளர் தனபால் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் வழக்குகள் இனி ஆன்லைன் மற்றும் நேரடி விசாரணை மூலம் நடைபெறும் என உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தனபால் அறிவித்துள்ளார். கொரோனா பரவலை அடுத்து, கடந்த…

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் வழக்குகள் இனி ஆன்லைன் மற்றும் நேரடி விசாரணை மூலம் நடைபெறும் என உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தனபால் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலை அடுத்து, கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஆன்லைன் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது. முதலில் முக்கிய வழக்குகள் மட்டுமே ஆன்லைனில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் அனைத்து நீதிமன்ற வழக்குகள் மீதான விசாரணை ஆன்லைனில் பெற்றது.

அதன் பின்னர், தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, படிப்படியாக, நேரடி விசாரணை முறைக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், வழக்கறிஞர்களின் தேவைகளை பொறுத்து, உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட வழக்குகள் ஆன்லைன் மூலமாக விசாரிக்கப்பட்டு வருகின்றது.

இதையும் படியுங்கள் : மேகாலயா, நாகாலாந்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் அனைத்து வழக்குகளும் ஆன்லைன் மற்றும் நேரடி விசாரணை மூலமாகவே தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றில் வாரத்தில் ஒருநாள் ஆன்லைன் மற்றும் நேரடி விசாரணைகள் மூலமாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயர்நீதிமன்ற அனைத்து வழக்கு விசாரணையும் வருகிற 3-ஆம் தேதி முதல், அனைத்து வெள்ளிக்கிழமைகளும் நேரடி மற்றும் ஆன்லைன் மூலமாக விசாரிக்கப்படும் எனவும், அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளிக்கிழமைகளில் வழக்கறிஞர்கள், ஆன்லைன் மூலமாகவும் விசாரணையில் ஆஜராகி வழக்குகளை எதிர்கொள்ளலாம் எனவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த நடைமுறை செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.