தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இன்று (14.07.2026) காலை பழைய பேட்டரியில் காரியம் (Lead) பிரித்து எடுக்கும் தனியார் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் அங்கு பணியிலிருந்த நபர்களுக்குத் தீக்காயம் ஏற்பட்டதில் எதிர்பாராதவிதமாக ஒருவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
-மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஒன்பது நபர்களுக்கு உயரிய சிறப்புச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற வருவாய்த் துறை, காவல் துறை, தொழிலாளர் நலத்துறை. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத் துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இவ்விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவரது உடலினை அரசு செலவில் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆறு நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




