தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்றும், அதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் கடந்த மே 15ம் தேதி சி.பி.எஸ்.இ ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. இதனைதொடர்ந்து, அந்த உத்தரவானாது ஜூலை முதல் அமலுக்கு வந்தது. சி.பி.எஸ்.இ.யின் இந்த உத்தரவை எதிர்த்துப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.
இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தின் தலைமை சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஆனந்த் குரோவர், கோபால் சங்கரநாராயணன் மற்றும் முகுல் ரோத்தஹி ஆகியோர், சி.பி.எஸ்.இ.யின் உத்தரவை உடனடியாகப் பின்பற்றாத ஆசிரியர்கள் மீது பள்ளிகள் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தனர்.
அதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், அத்தகைய பணிநீக்க நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் எங்களிடம் வாருங்கள், நாங்கள் அந்த அந்த நடவடிக்கைக்கு தடை விதிப்போம் என்று ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உறுதியளித்தார். மேலும் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், இந்த விவகாரத்தில் இருக்கம் நடைமுறைச் சிக்கல்களை நீதிமன்றத்திடம் சுட்டிக்காட்டினர்,
குறிப்பாக, அரசு பட்டியலிட்டுள்ள 22 மொழிகளில் வெறும் 3 மொழிகளுக்கான பாடப்புத்தகங்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகவும், மீதமுள்ள 19 மொழிகளுக்கான புத்தகங்கள் இல்லை எனவும், மேலும் திடீரென புதிய மொழிகளைக் கற்பிக்கப் போதிய பயிற்சி பெற்ற ஆசிரியர்களோ அல்லது மனிதவள உள்கட்டமைப்போ பள்ளிகளில் இல்லை. மேலும் 14 வயதான ஒரு 9ம் வகுப்பு மாணவன், ஏற்கனவே ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு படித்துக் கொண்டிருக்கும் சூழலில், திடீரென தமிழ் அல்லது மற்றொரு புதிய இந்திய மொழியைக் கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது மாணவர்களுக்குக் கூடுதல் சுமையையும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தயாரிப்பில் பாதிப்பையும் ஏற்படுத்தும். எனவே, சி.பி.எஸ்.இ.யின் இந்த சுற்றறிக்கை இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளுக்கு எதிரானது என்று எடுத்துரைத்தனர்.
அப்போது பேசிய நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் அறிவிப்பானது, இந்தி மற்றும் இதர இந்திய மொழிகளைக் கற்க வேண்டும் என்ற அரசியலமைப்புன் இலக்கை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது, இதன் நோக்கம் மிகவும் தெளிவானது. மேலும், இந்தியர்கள் ஆங்கிலத்தை ஒரு பூர்வீக இந்திய மொழியாகக் கருத முடியுமா? ஒரு காலத்தில் இந்த நீதிமன்றத்தின் மொழியாகப் பார்சி மொழி இருந்தது, ஆனால் அது 8-வது அட்டவணையில் உள்ளதா?” என்று குறிப்பிட்டு, இந்திய மொழிகளைக் கற்பதன் அவசியத்தை கூறினார்.
இதனைதொடர்ந்து மத்திய அரசு மற்றும் சி.பி.எஸ்.இ தரப்புக்காக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி, இந்த விவகாரம் குறித்துப் பதிலளிக்க இரண்டு வாரக் கால அவகாசம் வேண்டும் கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதிகள், வழக்கின் அவசரத் தன்மையைக் கருத்தில் கொண்டு ஒரு வார காலம் அவகாசம் வழங்கியதோடு, சி.பி.எஸ்.இ தனது பதில் மனுவை விரைந்து தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்




