இந்தியா-ஜப்பான் இடையே முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டி20 போட்டி!

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவும் ஜப்பானும் முதல் முறையாக ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆண்கள் டி20 போட்டியில் மோதவுள்ளன.  

ஜப்பான் கிரிக்கெட் சங்கமும் (JCA) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (BCCI) வெளியிட்ட அறிக்கையில், இரு ஆண்கள் அணிகளும் செப்டம்பர் 22 அன்று டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஒரு டி20 போட்டியில் மோதவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளன.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெறும் ஆடவர் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்க உள்ளன. ஜப்பான் குழு நிலைகளில் இடம்பெறும் நிலையில், இந்தியா நேரடியாக காலிறுதிச் சுற்றில் களமிறங்க உள்ளது. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா, இந்தப் போட்டியை ஒரு முக்கிய ஆயத்தப் போட்டியாகக் கருதும். அதே நேரத்தில், உலகின் தலைசிறந்த வீரர்களில் சிலருக்கு எதிரான இந்த மோதலில் இருந்து விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பெற ஜப்பான் அணி முனையும்.

“ஜப்பானில் நடைபெறும் ஒரு சிறப்பு டி20 சர்வதேசப் போட்டிக்காக இந்திய மற்றும் ஜப்பானிய ஆண்கள் அணிகள் ஒன்றிணையும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் பிசிசி மகிழ்ச்சி கொள்கிறது,” என்று பிசிசி செயலாளர் தேவாஜித் சாய்கியா கூறினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இரு அணிகளும் முதன்முறையாக சந்திக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியானது, விளையாட்டின் உலகளாவிய விரிவாக்கத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது. மேலும், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் திரும்புவதற்கு முன்பு, வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியானது ஒரு முக்கியமான படியாக விளங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.