கடந்த திமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தவர் எ.வ. வேலு. அக்கால கட்டத்தில் தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சாலைகளை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டும் எந்த இடத்திலும் பணிகளே நடைபெறாத நிலையில், முன்கூட்டியே தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கோடிக்கணக்கில் தொகை விடுவிக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தது.
தமிழ் நாட்டில் தவெக அரசு அமைந்த பின் எ.வ.வேலு, தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கடந்த 25ஆம் தேதி எ.வ. வேலுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதற்கிடையில் அவர் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு சென்றதால் அவரை தேடப்படும் நபராக அறிவித்து போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
தனக்கு எதிரான வழக்கையும், லுக்-அவுட் நோட்டீஸைம் ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து லுக்-அவுட் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.




