மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாட்டுக்கு எதிராக இடதுசாரி கூட்டணிகள் இறுதி வரை போராடும் என கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு வரும் 30ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மதுரையில் நடைபெற உள்ளது. மாநாட்டின் முன்னோட்டமாக மதுரை காமராசர் சாலையில் நடைபெற்ற கருந்தரங்கில் கேரள மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய குழு உறுப்பினர் சவுந்திரராஜன், மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் பேசிய சு.வெங்கடேசன்,”தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ரயில்வே திட்டங்கள் ஏதும் நடைபெறவில்லை” எனக் குற்றம் சாட்டினார்.மத்திய அரசின் நிதிக் கொள்கையையும், கூட்டாட்சி தத்துவத்தையும் எதிர்த்து கேள்வி கேட்கும் துணிச்சலும் நெஞ்சுறுதியும் கொண்ட மாநிலங்கள் தமிழ்நாடும் கேரளாவும் மட்டுமே எனவும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய கேரள மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு முறையால் மாநில அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாய் மத்திய அரசுக்கும் செல்லும் எனக் கூறினார். குறைந்த வரி வருவாயை வைத்து மாநில அரசு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை எனவும் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்குக் கூட நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்தார். மத்திய அரசு மாநில அரசுகள் மீது நிதி தாக்குதல் நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார். மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாட்டுக்கு எதிராக இடதுசாரி கூட்டணிகள் இறுதி வரை போராடும் என்றும் தெரிவித்தார்.







