வேலைக்காக தந்தையை கொலை செய்த மகன்

கீரனூர் அருகே தந்தையின் அரசுப் பணி தனக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் தந்தையை விஷம் வைத்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் திடீர் நகரை சேர்ந்த…

கீரனூர் அருகே தந்தையின் அரசுப் பணி தனக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் தந்தையை விஷம் வைத்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் திடீர் நகரை சேர்ந்த கருப்பையா கீரனூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக இருந்து வந்தார். இவர் வரும் 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி கருப்பையா மது போதையில் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் இறந்து கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் காவல்துறையினர் கருப்பையாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பிரேத பரிசோதனையில், இறந்த கருப்பையா உடலில் விஷம் கலந்து இருந்ததும் அவரது நெஞ்சில் ஒருவர் ஏறி மிதித்துக் கொலை செய்ததும் உறுதியானது. போலீசாரின் தொடர் விசாரணையில், பணியின் போது இறந்தால் வாரிசுக்கு வேலை கிடைக்கும் என்ற ஆசையில் கருப்பையாவின் மகன் பழனி தந்தைக்கு மதுவில் குருணை மருந்தை கலந்து கொடுத்தது தெரியவந்தது. மது அருந்தி உயிருக்குப் போராடிய கருப்பையாவை தனது நண்பரான ஆனந்தன் என்பவருடன் சேர்ந்து பழனி நெஞ்சிலேயே ஏறி மிதித்துக் கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.