உலக உறக்க தினத்தை முன்னிட்டு பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்களது அலுவலக ஊழியர்களுக்கு தூக்கத்தை பரிசாக வழங்கி விடுமுறை அறிவித்துள்ளது.
சர்வதேச தூக்க தினத்தை 2008 -ஆம் ஆண்டு World Sleep Society என்ற அமைப்பு தான் உருவாக்கியது. அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 17 ஆம் தேதி உலக உறக்க தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஓய்வெடுக்கவே நேரமில்லாமல் வேலை வேலை என்று அனைவரும் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் , சரியான தூக்கம் இல்லாததால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இதனையும் படியுங்கள்: உலக தூக்கம் நாள்: தூக்கத்தை மையப்படுத்திய சினிமா கதாபாத்திரங்கள்!!
நமது வாழ்க்கையில் வேலை என்பது முக்கியமான அங்கமாக உள்ளது. அதனால் நம்மில் பலருக்கும் சரியாக தூங்க நேரம் கிடைக்காமல் போகலாம். பலர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக முடித்து, உயர் அதிகாரிகளிடம் நற்பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக 24 மணி நேரமும் ஓய்வே இல்லாமல் உழைத்து கொண்டிருப்பார்கள். இது சிலருக்கு வழக்கமாகிவிட்டாலும், இதனை மாற்றுவதற்காக பல்வேறு அமைப்புகளும் புது புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவர்களும் ஒரு நாளைக்கு குறைந்தது 6 மணி நேரமாவது நிம்மதியான உறக்கத்தை அனுபவிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
ஆனால் எல்லோரும் அதை பின்பற்ற நினைத்தாலும், சில நிறுவனங்கள் விடுமுறை தினத்தில் கூட, தங்களது ஊழியர்களை வேலைக்கு வரச்சொல்லி பணியாற்ற வைக்கின்றனர். இந்த மாதிரியான தருணத்தில் பெங்களூருவை சேர்ந்த வேக்பிட் சொலியூஷன்ஸ் (Wakefit Solutions) என்ற தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களின் நலனில் மட்டுமின்றி தூக்கமின்மையின் தாக்கத்தை கருத்தில் கொண்டும், உலக உறக்க தினத்தை கொண்டாடும் வகையிலும் தங்களது நிறுவன பணியாளர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அந்த நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு ‘தூக்க பரிசு’ என தலைப்பில் மெயில் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த மெயிலில், சர்வதேச தூக்க தினத்தை முன்னிட்டும், இந்த தினத்தை பண்டிகையாக கொண்டாடும் வகையிலும் மார்ச் 17- ஆம் தேதி ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மெயில் தற்போது லிங்க்டினில் (LinkedIn) வைரலாகி வருகிறது.
Official Announcement 📢 #sleep #powernap #afternoonnap pic.twitter.com/9rOiyL3B3S
— Wakefit (@WakefitCo) May 5, 2022
பெங்களூருவை சேர்ந்த இந்த வேக்பிட் சொலியூஷன்ஸ் என்ற நிறுவனம் தன் பணியாளர்களுக்கு ஏற்ற வகையில் சலுகையை அறிவிப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு, தங்களது நிறுவன பணியாளர்களுக்கு “ரைட் டு நாப் கொள்கையை” அதாவது ஊழியர்கள் தங்களுடைய வேலைக்கு நடுவே 30 நிமிடம் வரை தூங்கலாம் அறிவிப்பை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது .
- பி.ஜேம்ஸ் லிசா









