ஈரோடு பேருந்து நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் இருந்தும் செயல்படாத நிலையில் உள்ளதால் அப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
ஈரோடு மாவட்ட பேருந்து நிலையம் கொங்கு மண்டலத்தில் முக்கியமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. காலை நேரம் முதல் மாலை நேரம் வரை மக்கள் பேருந்து நிலையத்திற்கு வருவதும் செல்வதுமாக இருப்பதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படும்.
பயணிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் புற காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இக் காவல் நிலையத்தில் 20 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பேருந்து நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பேருந்து நிலையம் விரிவாக்க பணிக்காக புற காவல் நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாற்றம் செய்யப்பட்ட காவல் நிலையத்தில் இரண்டு ,மூன்று காவல் துறையினர் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட 30க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் செயல்படாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் அதிகப்படியான குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
மேலும் இரவு நேரங்களில் வாகன திருட்டு, செல்போன் பறிப்பு போன்ற திருட்டு சம்பவங்கள் அதிகம் நடந்து வருகின்றன.
—கோ. சிவசங்கரன்







