தர்மபுரி மாவட்டத்தில் தாயை பிரிந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியடைந்ததால், முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் ஆஸ்கர் விருது பெற்ற யானை பாகன் பொம்மன்-பெள்ளியிடம் ஒப்படைத்து குட்டி யானையை பராமரிக்க வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
தற்போது தர்மபுரியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள குட்டியை பாதுகாத்து வளர்க்க முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் கரால் கூண்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள போடூர் அடுத்த கட்டமடுவு கிராமத்தில் விவசாய நிலத்தில் தவறி விழுந்து வனத்துறையினர் மூலம் மீட்க்கப்பட்ட சுமார் பிறந்து 5 முதல் 6 மாதங்களே ஆன குட்டி யானை வனத்துறையினர் மூலம் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டு வரப்பட்டு வளர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தர்மபுரி வனத்துறையினர் மீட்க்கப்பட்ட குட்டி யானையை காட்டு யானைக் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து வனத்துறையினர் குட்டி யானையை முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டுவரப்பட்டு இந்த குட்டி யானையை வளர்க்க ஆஸ்கர் விருது பெற்ற ’எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படத்தின் கதாப்பாத்திரமாக நடித்த பொம்மன் மற்றும் பெள்ளி இந்த யானையின் பராமரிப்பாளராக பணியமர்த்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அண்மைச் செய்தி : உலக தூக்கம் நாள்: தூக்கத்தை மையப்படுத்திய சினிமா கதாபாத்திரங்கள்!!
இதன் மூலம் நேற்று தர்மபுரி மாவட்டத்திலிருந்து வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டு தற்போது முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் குட்டி யானை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது குட்டி யானையை பாதுகாக்கும் வகையில் யானைக்கு தேவையான உணவு, பால், லாக்டோஜன் உள்ளிட்ட புரத பொருட்கள் நிறைந்த உணவுபொருட்கள் வழங்கப்பட்டு பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் குட்டி யானையை வளர்க்க கரால் கூண்டு அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பொம்மி யானை பராமரிக்கும் கரால் அருகே தர்மபுரியிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள குட்டி யானையை பராமரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.







