ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்திற்கு எதிராக சிபிசிஐடி அனுப்பிய நோட்டிஸுக்கு தடைவிதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் தனியார் வங்கி ஊழியர் உயிரை மாய்த்துக்கொண்ட வழக்கில், மும்பையை சேர்ந்த விளையாட்டு நிறுவனத்திற்கு சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸ்க்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழப்பு ஏற்பட்டதால், சென்னை பெருங்குடியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களை கொலை செய்துவிட்டு, அவரும் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு, தனியார் விளையாட்டு நிறுவனத்திற்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழப்பு ஏற்பட்டதால் மனைவி, மகன்களை கொன்று,
தனியார் வங்கி ஊழியர் தற்கொலை செய்தது தொடர்பாக மும்பையை சேர்ந்த கேம்ஸ் 24*7 நிறுவனத்திற்கு சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸ் மீது எவ்வித இடைக்கால உத்தரவும்
பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழப்பு ஏற்பட்டதால், சென்னை பெருங்குடியில்
வசித்துவந்த லண்டனை சேர்ந்த தனியார் வங்கியின் ஊழியரான மணிகண்டன் என்பவர் தனது மனைவி தாரகபிரியா, 11 வயது மகன் தாரன், ஒன்றரை வயது தாகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். கடந்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என சிபிசிஐடி விசாரித்து வந்த
நிலையில், கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இதுதொடர்பான விசாரணைக்காக, மணிகண்டனின் விளையாட்டு தொடர்பான விவரங்கள், விளையாட்டு மூலம் அவருக்கு கிடைத்த போனஸ், விளையாட்டின் மூலம் 3 லட்சத்து 28 ஆயிரம் சம்பாதித்த விவரங்கள், வருமான வரி பிடித்தம் தொடர்பான விவரங்கள் ஆகியவற்றை வழங்கக் கூறி, மும்பையை சேர்ந்த 24*7 கேம்ஸ் என்கிற நிறுவனத்திற்கு சிபிசிஐடி கடந்த மாதம் 24ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
இதேபோல சென்னை அண்ணா நகரை சேர்ந்த ரகுவரன் மரணம் தொடர்பாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த இரு நோட்டீஸ்களையும் ரத்து செய்யவும், அவற்றிற்கு தடை விதிக்கவும் கோரி கேம்ஸ் 24*7 நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளது. அந்த மனுக்களில், காவல்துறை கேட்ட விவரங்களை வழங்கி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில், காவல்துறை உள்நோக்குடன் பொத்தாம்பொதுவாக விசாரணையை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பணம் வைத்து விளையாடும்படி யாரையும் வற்புறுத்தவில்லை என்றும், வெற்றி
தோல்வியை தீர்மானிப்பதில் தங்கள் பங்கு ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ள
நிறுவனம், ரம்மி தடை சட்டத்தை தடை செய்யும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வியால்,
விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது. 2017 ஏப்ரலுக்கு பிறகு மணிகண்டன் தங்கள் தளத்தில் விளையாடவில்லை என்றும், 5 ஆண்டுகளுக்கு பிறகே தற்கொலை செய்து கொண்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
விசாரணைக்காக தகவல்களை கேட்டு மட்டுமே சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளதால்,
தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி
மறுத்துவிட்டார். மேலும் தமிழக அரசு, டிஜிபி, சிபிசிஐடி காவல்துறை ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 14ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.
– யாழன்