தமிழ் நாடு சட்டமன்றத்தில் இன்று தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 144 உறுப்பினர்களின் ஆதரவு பெற்று விஜய் தலைமையிலான அரசு வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கிடையே சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தொடர்பாக பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என சொன்ன தவெக தற்போது கொள்கை எதிரி என சொன்ன பாஜக கூட்டணியில் போட்டியிட்ட உறுப்பினர் ஒருவரை ஆதரவு தெரிவிக்க வைத்துள்ளது. அந்த கட்சித் தலைவர் டிடிவி தினகரன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம் என்று கூறியுள்ளார்’ என்று என்றார்.
அதே போல தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது குதிரை பேரம் நடப்பதாக எழ்ந்துள்ள புகார் குறித்து முதலமைச்சர் விஜய் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், ”அரசியல் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. அப்படி வருகின்ற சூழலில், ஒரு தரப்புக்கு முதலமைச்சர் ஆதரவு தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்…? இது குதிரை பேரத்திற்கு வழிவகுத்துவிடும்” என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், “எமது அரசு குதிரைபேர அரசு இல்லை. குதிரை வேகத்தில் செயல்படுகிற அரசு” என்று பதிலளித்தார்.







