ஈரோட்டில் சலவை ஆலையில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளி மர்மமான முறையில் உடல் கருகி உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் தாசில்தார் தோட்டம் என்ற பகுதியில் முரளிதரன் என்பவருக்கு சொந்தமாக சலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வரும் நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நிக்கில் என்ற இளைஞர் கடந்த ஒன்றரை மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை நிக்கில் பணிக்கு வராத நிலையில் சக தொழிலாளர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.அப்போது அவர் மர்மமான முறையில் உடல் கருகி உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனைக் கண்ட சக தொழிலாளர்கள் சலவை ஆலை உரிமையாளர் முரளிதரன் மற்றும் கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நிக்கில் அறையில் இருந்து மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







