பிரபல இசைமைப்பாளரான ராஜ் (தோட்டகுரு சோமராஜு) மாரடைப்பால் காலமானார்.
1980, 90-களில் திரைத்துறையில் பிரபலமான இசையமைப்பாளர்களாக வலம் வந்த இருவர் தோட்டகுரு சோமராஜு மற்றும் சலூரி கோட்டேஷ்வர் ராவ். ‘ராஜ் – கோட்டி’ என்று பரவலாக அழைக்கப்பட்ட இவர்கள் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். இதில் ராஜ் மட்டும் தனியே 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று குளியலறையில் திடீரென ராஜ் தவறி விழுந்துள்ளார். அவரை உடனடியாக குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். ஆனால் தவறி விழுந்ததில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டதாக, பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். 68 வயதில் உயிரிழந்த இசையமைப்பாளர் ராஜ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இசையமைப்பாளர் ராஜின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனது ட்விட்டர் பக்கத்தில், ராஜின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும், 80களில் ராஜ்-கோட்டியுடன் பணியாற்றிய இனிமையான நினைவுகளை எப்போதும் தன்னால் மறக்கமுடியாது என்றும் பதிவிட்டுள்ளார்.







